சித்தூர் அருகே பசுமந்தா கிராமத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரவேண்டும்-மனுநீதிநாள் முகாமில் கிராம மக்கள் மனு

சித்தூர் :  சித்தூர் அருகே குடிபாலா மண்டலம் பசுமந்தா கிராமத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வேண்டும் என மனுநீதிநாள் முகாமில் கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாமில் 584 பேர் மனுக்கள் அளித்தனர்.சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை வாராந்திர மனுநீதி நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மனுநீதிநாள் முகாம் கலெக்டர் முருகன் ஹரி நாராயணன் தலைமையில் நடந்தது. இதில் 584 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலம் பசுமந்தா கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத் தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், ‘எங்கள் கிராமம் அருகே அரசுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்து பயனடைந்து வந்தார்கள்.

ஆனால் எங்கள் கிராமத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை யாதமரி மண்டலம் கினாட்டம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அவரிடம் சென்று எங்கள் கிராமத்தை சொந்தமான நிலத்தை நீங்கள் எவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யலாம் என தட்டிக் கேட்டோம். அதற்கு அவர் எனக்கு சொந்தமான நிலம் அதற்கான பட்டா பாஸ்புத்தகம் அனைத்தும் உள்ளது என தெரிவித்து கிராம மக்களை சித்தூரிலிருந்து அடியாட்களை வரவழைத்து அடித்து விரட்டினார்கள்.

இது குறித்து கிராம வருவாய்த்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மண்டல வருவாய் துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். மண்டல வருவாய் துறை அதிகாரியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் கிராமத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை மாவட்ட கலெக்டர் மீட்டு தர வேண்டும். எங்கள் கிராமத்தில் வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கு அந்த ஆறு ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.  

மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை மீட்டு தர வேண்டும். இல்லை என்றால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்‘ என்றனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் அந்த இடத்திற்கு வருவாய் துறை அதிகாரிகளை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்

இதேபோல் ஏராளமான பொதுமக்கள் குடிநீர் பிரச்சனை, கழிவுநீர் கால்வாய் பிரச்சினை, சாலை வசதி வேண்டுமென்றும், சுடுகாடுக்கு சாலை வசதி வேண்டுமென்றும், முதியோர் உதவித்தொகை வேண்டும் என்றும், இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் முருகன் ஹரி நாராயணன் மற்றும் இணை கலெக்டர் வெங்கடேஷ், ஆர்டிஓ ராஜசேகர் ஆகியோர் உரிய  நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Related Stories: