கொள்ளிடம் அருகே பக்கிங்காம் கால்வாய் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுமான பணி பாதியில் நிறுத்தம்-3 ஆண்டாக மக்கள் கடும் அவதி

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே உயர்மட்ட பாலம் கட்டுமான பணி பாதியில் நின்றதால் கடந்த 3 ஆண்டாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் கிராமத்திலிருந்து கொட்டாய் மேடு, ஓலகொட்டாய்மேடு, மடவா மேடு, பழையாறு மீன்பிடி துறைமுகம், புதுப்பட்டினம், கூழையாறு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களுக்கு செல்லும் வகையில் கடற்கரை ஓர சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைந்துள்ளது.

தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து கடற்கரை ஓர சாலைக்கு செல்லும் இந்த சாலையின் குறுக்கே பக்கிங்காம் கால்வாய் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த சாலையின் நடுவே பக்கிகாம் கால்வாய் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு பதிலாக பழைய பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, புதியதாக நபார்டு திட்டத்தின் மூலம் ரூ3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது.

ஆனால் பாலம் கட்டும் பணி 20 சதவீதம் கூட முடியாத நிலையில் பல்வேறு காரணங்களால் ஒருசில மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை அந்தப் பாலத்தை தொடர்ந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்காததால், தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து கடற்கரையோர சாலையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு தினந்தோறும் சென்று வரும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதனால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கடற்கரையோர மீனவ கிராமங்களின் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. பணி துவங்கிய போது புதியதாக தற்காலிக இணைப்பு சாலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த இணைப்புச் சாலையின் வழியாகத்தான் தொடர்ந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சிரமத்துடன் இந்த வழியை கடந்து தான் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பக்கிங் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொடர்ந்து சாலையை மூழ்கடித்தது. இதனால் இந்த சாலை வழியே சென்று வர முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. கடலோர கிராம மக்கள் கொள்ளிடம்,சீர்காழி,சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து சென்றவர்கள் வேறு வழியை பின்பற்றி வந்தனர். இதுகுறித்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில் நேற்று தற்காலிக இணைப்புச் சாலையை நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கொட்டாய்மேடு பகுதியில் உள்ள கிராம மக்கள் கூறுகையில், கடந்த 4 வருடங்களாக இந்தப் பாலம் கட்டும் பணி நடைபெறாமல் உள்ளது. இதனால் கடலோர கிராம மக்கள் மிகுந்த சிரம் அடைந்து வருகின்றனர். இப்பாலம் கட்டும்பணி நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. உடனடியாக அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பாலத்தை உடனடியாக கட்டி முடித்து, சாலையை மேம்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories: