சோளிங்கரில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான யோக நரசிம்மர் கோயில், கார்த்திகை பெருவிழா தொடங்கியது; கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறக்கும் யோக நரசிம்மர்

சோளிங்கர்: 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில் கார்த்திகை பெருவிழா தொடங்கியது. கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறக்கும் யோக  நரசிம்மரை தரிசிக்க தற்போது பக்தர்கள் திரண்டு வருகின்றனர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி கோயில் விளங்குகிறது. இத்திருத்தலத்தில் ஒரு கடிகை நேரம் தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பதால் திருக்கடிகை என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. இத்திருத்தலம் சோழநாட்டை போல் வளம் மிகுந்து காணப்பட்டதால் சோழசிம்மபுரம் என்று அழைக்கபட்டது. நாளடைவில் மருவி தற்போது சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் சங்க காலத்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பு கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இத்தலம் காசி, கங்கை ஆகியவற்றை விட மேலானதாக போற்றப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோயில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது. நரசிம்மர் என்றாலே உக்ரமும் பிரமாண்டமும் தான் நினைவுக்கு வரும். சாந்த மூர்த்தியாக கருணையே வடிவமாக காட்சி தரும் யோக நரசிம்மரை சோளிங்கர் மலைக்கோயிலில் காணலாம். 750 அடி உயரத்தில் 1305 படிகட்டுகளுடன் 200 அடிநீளம் 150அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலும் அமைந்துள்ள கடிகாசலம் எனும் ஒரே குன்றிலான பெரியமலைக்கோயிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதன் அருகில் உள்ள சன்னதியில் அமிர்தவல்லி தாயாரும் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து அருள் பாலித்து வருகின்றனர். இந்த மலையின் எதிர் திசையில் சிறிய மலையின் மீது 406 படிகட்டுகளுடன் 150 அடி நீளம் 250 அடி அகலத்துடன் ஒரு ஏக்கர் பரப்பளவில் 350 அடி உயரத்தில் அமைந்துள்ள சிறிய மலைக் கோயிலில்  யோக ஆஞ்சனேயர் தியான நிலையில் அமர்ந்தபடி அருள்பாலித்து வருகிறார்.

பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரையும் சிறிய மலையில் உள்ள யோக ஆஞ்சனேயரையும் தரிசனம் செய்தால் பேய், பிசாசு, பில்லி, சூன்யம், மனநோய், திருமண தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கி நலம் பெறுவதாக ஐதீகம். சோளிங்கரில்  11 மாதங்கள் யோகநிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் யோக நரசிம்மர்  கார்த்திகை மாதம் முழுவதும் கண்திறந்து அருள் பாலிப்பதாக ஐதீகம். சோளிங்கர் மலையில் சப்தரிஷிகளும் தவம் செய்து யோக நரசிம்மரின் காட்சியைப் பெற்றனர். சப்தரிஷிகள் அருள் பெற்றது போல பக்தர்களும் அருள்பெறவே கார்த்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்து பார்த்து அருள்கிறார். இதன் காரணமாக இக்கோயிலில் கார்த்திகை பெருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதனால் கார்த்திகை மாதத்தில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சோளிங்கர் லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்து தாங்கள் வேண்டும் வரங்களை பெற்றுச் செல்கின்றனர்.

இந்நிலையில், தற்போது கார்த்திகை பெருவிழா தொடங்கியுள்ளதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர். படியில் ஏறிச் சென்று தரிசிக்க முடியாத நிலையில் உள்ள பக்தர்களின் வசதிக்காக டோலி வசதி உள்ளது. தற்போது ரோப் கார் பணிகள் நிறைவடைந்து விரைவில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இக்கோயில் சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும், வேலூரிலிருந்து 54 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், திருத்தணியிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சோளிங்கர் பஸ் நிலையத்திலிருந்து மலையடிவாரம் வரை செல்ல கோயில் சார்பில் இயக்கப்படும் மினி பஸ் அல்லது ஆட்டோவில் செல்லலாம்.

Related Stories: