பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ் செய்யப்படும் விடியோ வைரல்

டெல்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ் செய்யப்படும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் விஐபி வசதிகள் செய்துகொடுத்தது தெரியவந்ததை அடுத்து திகார் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ம் ஆண்டில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதன் அடிப்படையில், பணமோசடி வழக்கில் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்கதுறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், பணமோசடி வழக்கில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், அவரின் மனைவி உள்ளிட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யேந்தர் ஜெயின் பின்னர் திகார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் விடியோவை பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேஷாத் பூனவாலா சுட்டுரையில் இன்று (நவ.19) பகிர்ந்துள்ளார். அதில், சிறையில் உள்ள சத்யேந்தர் ஜெயின் அறையில் கேன் குடிநீர், மெத்தை, மசாஜ் போன்ற விஐபி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இருந்தபோது, சிறைக்குள் இருந்தபடியே மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: