சிலை கடத்தல் வழக்கில் காழ்ப்புணர்ச்சியால் என் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் வாதம்

புதுடெல்லி: சிலை கடத்தல் வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் காதர் பாஷா கோரியுள்ளார். சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்திய குற்றச்சாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் டிஎஸ்பி.யாக இருந்த காதர் பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைக்கவே, ஐஜி பொன்.மாணிக்கவேல் என் மீது  பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். இது பற்றி சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும்,’ என கோரினார்.  இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதி கிருஷ்ணா முராரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, ‘பொன் மாணிக்கவேல் மீது குற்றம்சாட்டியுள்ள காதர் பாஷா மீது பல்வேறு சிலை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக, மனுதாரர் மீது அவர் தவறான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதில், உயர் நீதிமன்றம் முழுமையான விசாரணையை நடத்தவில்லை. எனவே, சிபிஐ விசாரணை தடை விதிக்க வேண்டும்,’ என கோரினார். காதர் பாஷாவின் வழக்கறிஞர் பிரனாப் பிரகாஷ், ‘பொன்.மாணிக்கவேலின் அனைத்து கோரிக்கைகளையும் உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அதனால், இந்த விவகாரத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories: