விருத்தாசலத்தில் எடப்பாடி பழனிச்சாமி வருகையின் போது நடுரோட்டில் நின்ற அதிமுக கொடிகட்டிய கார்: 108 ஆம்புலன்ஸ் வழிவிடாமல் நின்றதால் பரபரப்பு

விருத்தாசலம்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பிறகு சேத்தியாதோப்பு, கம்மாபுரம் விருத்தாசலம் வழியாக சேலம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக விருத்தாசலம் அருகே உள்ள கோ.பொன்னேரி புறவழிச் சாலை ரவுண்டானாவில் அதிமுகவினர் திரண்டிருந்தனர். இதற்காக வந்திருந்த அதிமுகவினர் விருத்தாசலம் சிதம்பரம் சாலையில் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றிருந்தனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக நோயாளியை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

 

அப்போது அதிமுக கொடி கட்டிய கார் ஒன்று நடுரோட்டில் நின்றதால் 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நீண்ட நேரமாக சைரன் சத்தத்துடன் நின்று கொண்டிருந்தது. இதைப் பற்றி எதுவும் கண்டு கொள்ளாத மாதிரி அதிமுகவினர் அங்கே நின்று கொண்டிருந்தனர். கார் உரிமையாளரும் நீண்ட நேரம் ஆகியும் அங்கு வரவில்லை. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்து அந்தக் காரை ஓரமாக தள்ளிவிட்டு ஆம்புலன்ஸ்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: