சபரிமலையில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள்: குறிப்பிட்ட நேரத்திலேயே தரிசனம் செய்யலாம்

திருவனந்தபுரம்: ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு அதில் குறிப்பிட்ட நேரத்திலேயே தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெற்றன. இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டதால் நடை திறந்த முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். கார்த்திகை 1ம் தேதியான நேற்று 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  தரிசனம் செய்தனர். இந்தநிலையில் இன்று 2வது நாளாக சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இன்று தரிசனத்திற்காக 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். இது தவிர நிலக்கல், திருவனந்தபுரம், குமுளி உள்பட கேரளாவில் 13 இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் திறக்கப்பட்டு உள்ளது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ஆன்லைன் முன்பதிவு குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியது: தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு பக்தர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாவிட்டாலும், சபரிமலை செல்லும் வழியில் நிலக்கல் உட்பட கேரளாவில் 13 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடனடி முன்பதிவு வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட நேரத்திலேயே தரிசனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. குறிப்பிட்ட நாளில் 24 மணி நேரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதுமட்டுமில்லாமல் எவ்வளவு கூட்டம் இருந்தாலும்  ஆன்லைனில்  குறிப்பிட்ட நேரத்திலேயே தரிசனம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: