கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்த விவகாரத்தில் 2 மருத்துவர்களுக்கும் முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: கால்பந்து வீராங்கனையும் கல்லூரி மாணவியான பிரியா மரணமடைந்த விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமின் மறுக்கப்பட்டது. கால் சவ்வு பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவி பிரியாவின் கால் அகற்றப்பட்டது. கால்கள் அகற்றப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவி பிரியா சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பால் ராம் சங்கர், சோமசுந்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பேரவள்ளூர் போலீசார் கவனக்குறைவால் மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, எங்கள் குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர், முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து பணி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிட்டேன் என்று எப்படி கூற முடியும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தற்போதுதான் சம்பவம் நடந்துள்ளது; விசாரணை நடத்த சிறிது அவகாசம் வழங்க வேண்டும். மருத்துவர்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும்; மருத்துவர்களின் குடும்பத்தினரை துன்புறுத்தக்கூடாது என நீதிபதி கூறினார். உங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது; வேண்டுமானால் சரணடையுங்கள் என நீதிபதி ஜெகதீஸ் சந்திரா தெரிவித்தார். மேலும், மருத்துவர்கள் பால் ராம் சங்கர், சோமசுந்தரருக்கு முன்ஜாமினை வழங்க நீதிபதி ஜெகதீஸ் சந்திரா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

Related Stories: