ராமநாதபுரம் மாவட்ட கோயில்களில் பனை ஓலை பொருட்கள் விற்பனை ஜோர்: ஆர்வத்துடன் வாங்கும் சுற்றுலா பயணிகள்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்ட பிரபலமான கோயில்களில் பனை ஓலை, நாரால் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் விற்பனை நடந்து வருவதால் வெளிமாவட்டம், வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே கன்னிராஜபுரம், நரிப்பையூர் தொடங்கி திருப்புல்லாணி, உச்சிப்புளி, ராமேஸ்வரம், தொண்டி என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பனைமரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உப தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. பனை ஓலை முதல் மரத்தின் வேர் பகுதி வரை பயனுள்ளதாக இருப்பது பனை மரத்தின் தனிச்சிறப்பு. இதனால் பூலோகத்தின் கற்பகதரு என அழைக்கப்படுகிறது.

 பனை சீவுதல், மரம் ஏறுதல், பதனீர் இறக்குதல், வேலிக்கு பனைமட்டை சீவுதல், நார் பிரித்தெடுத்தல் கயிறு உற்பத்தி உள்ளிட்ட கஷ்டமான வேலைகளை ஆண்கள் பார்த்தாலும் கூட, கருப்பட்டி காய்ச்சுவது, பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றை பெண்கள் கவனித்து வருகின்றனர். இதனால் பனை தொழிலாளர்களின் குடும்பத் தொழிலாகவும் இருந்து வருகிறது. மாவட்டத்தில் ராமநாதபுரம், திருப்புல்லாணி பகுதியிலுள்ள தினைக்குளம், மொங்காவலசை, மொத்திவலசை, ரெகுநாதபுரம், தாமரைகுளம், தில்லையேந்தல், மாயாகுளம் மற்றும் காவாகுளம், நரிப்பையூர் உள்ளிட்ட  பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் பொருட்டு  பனை ஓலை, பனை நார் மூலம் கைவினை பொருட்களை தயாரிப்பது குறித்து முறையாக பயிற்சியளித்து பொருட்களை தயாரித்து வருகிறது.

 அதன்படி பல வண்ணங்களில்  பனைஓலையிலான கலர்புல் மாலைகள், வீடு, அலுவலக அலங்கார தோரணங்கள், பெண்களை கவரக்கூடிய தோடு, வளையல், கழுத்து அணிகலன்கள், மணி பர்சுகள், ஹேண்ட் பேக், குழந்தைகளை மகிழ்விக்கும் கிலுகிலுப்பை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள், பனை ஓலை பெட்டிகள்,  வண்ண விசிறி போன்றவை தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக், உலோகங்களால் நவீன முறையில் செய்யப்படும் பொருட்கள் மத்தியில், முழுவதும் கைவண்ணத்தில் தயாரிக்கப்படுகின்ற இந்த பொருட்கள் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை, திருவாடானை, நயினார்கோயில் மற்றும் ஏர்வாடி தர்ஹா உள்ளிட்ட கோயில் கடைகளில் சில்லரை விற்பனைக்கு விற்கப்படுகிறது.

 ரூ.10 முதல் ரூ.1000 வரையிலான விலையுள்ள பொருட்களை உள்மாவட்ட மக்கள் மட்டுமின்றி ஆன்மீக சுற்றுலா வரும் வெளிமாவட்டம், வெளிமாநிலத்தவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். திருஉத்தரகோசமங்கை வியாபாரி ஒருவர் கூறும்போது, மகளிர் குழுக்களிடம் வாங்கி விற்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் பொருட்கள், வீடு, அலுவலகம், அலங்கார பொருட்கள், பூஜை அறை பொருட்கள் ரூ.10 முதல் விற்கப்படுகிறது. பாரம்பரிய பொருட்கள் என்பதால் உள்ளூர் மக்கள் முதல் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வரை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

Related Stories: