சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு 50 பயணிகளுடன் சென்ற பஸ்சை வழிமறித்த யானை: 8 கிமீ பின்னோக்கி சென்றதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை காட்டு யானை திடீரென மறித்ததால் டிரைவர் 8 கிமீ பின்னோக்கி ஓட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வனப்பாதை வழியாக செல்லும் பஸ்கள் உள்பட தனியார் வாகனங்களை அடிக்கடி யானைகள் உள்பட வனவிலங்குகள் பயமுறுத்துவது உண்டு. குறிப்பாக யானைகள் தான் பெரும்பாலும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கம்.

சமீபத்தில் மூணாறு, மேட்டுப்பாளையம் உள்பட பல பகுதிகளில் பஸ்கள் மீது யானைகள் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்தநிலையில் நேற்று திருச்சூரில் இருந்து வால்பாறை நோக்கி 50 பயணிகளுடன் தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது கபாலி என்ற ஒரு காட்டு யானையிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் நடந்து உள்ளது. திருச்சூர் அருகே சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் சோலையார் அருகே வனப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

கடந்த சில மாதங்களாக அந்த பாதையில் கபாலி என்ற காட்டு யானை அடிக்கடி அட்டகாசம் செய்து வந்தது. திடீரென தனியார் பஸ்சின் முன்பு பிளிறியபடியே கபாலி யானை வந்தது. கபாலியை பார்த்தும் டிரைவர் உள்பட 50 பயணிகளும் பயந்து அலறினர். வளைவான பாதை என்பதால் டிரைவரால் பஸ்சை திருப்பவும் முடியவில்லை. இதனால் டிரைவர் பஸ்சை மெதுவாக பின்னோக்கி எடுத்தார். யானையும் தொடர்ந்து பஸ்சை விரட்டியது. சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் யானை விடாமல் பஸ்சை விரட்டியது.

ஆனக்கயம் என்ற இடத்திற்கு அருகே வந்த போது கபாலி யானை காட்டுக்குள் சென்று விட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அதிர்ச்சியில் இருந்த பயணிகள் அதன் பின்னர் தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இதன் பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Related Stories: