பாலியில் நடந்த உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு; ஜி-20 தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு: இந்தோனேசியா அதிபரிடம் பிரதமர் மோடி பெறுகிறார்

பாலி: இந்தோனேசியாவில் நடந்த ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அடுத்தாண்டுக்கான ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை இந்தோனேசியா அதிபர் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கிறார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் உச்சி மாநாட்டின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான இன்று, ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்புகள் நடக்கிறது. அந்த வகையில் பிரதமர் மோடி இன்று சுமார் 8 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து சந்தித்து பேசுகிறார். இதில் பிரான்ஸ், ஸ்பெயின், இந்தோனேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் அடங்குவர். இதுதவிர, பிரதமர் மோடி இன்று இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இரண்டாவது நாள் உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக பாலியில் உள்ள தாமன் ஹுதான் ராயா சதுப்புநிலக் காடுகள் அமைந்துள்ள பகுதியில் உறுப்பு நாடுகள் தலைவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்பதற்காக வந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார். பிரதமர் மோடி உட்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் சதுப்பு நில காடுகளை பார்வையிட்டனர். தொடர்ந்து மரக்கன்றுகளை தலைவர்கள் நடவு செய்தனர். காடுகளில் பராமரிக்கப்படும் மரக்கன்றுகளையும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அதன்பின் 17வது ஜி-20 நாடுகளின் பாலி மாநாடு நிறைவடைந்தது. அதன்பின் 18வது ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ (தற்போதைய ஜி-20 தலைமை) இந்தியாவிடம் ஒப்படைக்கிறார்.

கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பர் 1ம் தேதியில் இருந்து இந்தியா அதிகாரபூர்வமாக ஏற்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டுக்கு வருகை தருமாறு உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு ஏற்கனவே பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதில், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி-20 கூட்டமைப்பை இந்தியா தலைமையேற்று வழிநடத்தும்.

சர்வதேச அளவிலான சமச்சீர் வளர்ச்சி, ஒருங்கிணைந்த எதிர்காலம் ஆகியவற்றை அக்கொள்கை உறுதி செய்யும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தோனேசியாவில் நடந்த 2 நாள் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்றிரவு நாடு திரும்புகிறார் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: