‘பல ஆண்களை ஏமாற்றி திருமணம்’ பண மோசடி வழக்கில் கைதான திருநங்கை மீது குண்டாஸ்

திருச்சி: விழுப்புரம் சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியிலும், பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், கிள்ளுக்குளவாய்பட்டியிலும் வசித்து வந்த திருநங்கை பபிதா ரோஸ்(27) மீது, ஏற்கனவே பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதேபோல், திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் அரண்மனை தோட்டம் அருகே புதிதாக வீடு ஒன்றை பபிதா ரோஸ் கட்டினார். அந்த வீட்டை கட்டிக் கொடுத்த கட்டிட ஒப்பந்ததாரரான முருகேசன்(48) என்பவருக்கு ரூ.21 லட்சம் தராமல் பபிதா ரோஸ் மோசடி செய்துள்ளார்.  இது தொடர்பான புகாரின்பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கை பபிதா ரோசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அ.புதுப்பட்டி முருகேசன்(30) என்பவரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக மேலும் ஒரு வழக்கிலும் பபிதா ரோஸ் கைது செய்யப்பட்டார். திருநங்கை பபிதா ரோஸ், பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தது, பலரிடம் ஏமாற்றி பணம் பெற்றது என அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் பபிதாரோசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாவட்ட கலெக்டருக்கு, எஸ்பி சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் திருநங்கை பபிதாரோசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து வளநாடு போலீசார், திருநங்கை பபிதாரோஸ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதற்கான நகலை திருச்சி சிறையில் உள்ள அவரிடம் வழங்கினார்.

Related Stories: