மெயின்புரி மக்களவை இடைத்தேர்தலில் முலாயம் மருமகளை எதிர்த்து சமாஜ்வாதி மாஜி எம்பி போட்டி: பாஜகவின் ஒரு எம்பி, 5 எம்எல்ஏ வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: மெயின்புரி மக்களவை தொகுதி, 5 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முலாயம் சிங் மருமகளை எதிர்த்து முன்னாள் சமாஜ்வாதி எம்பி போட்டியிடுகிறார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில மெயின்புரி  எம்பியுமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில வாரங்களுக்கு முன் காலமானார்.  அதனால் மெயின்புரி எம்பி தொகுதி காலியானது.

இந்த நிலையில் தலைமை தேர்தல்  ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘உத்தரபிரதேசத்தின் மெயின்புரி  எம்பி தொகுதி, காலியாக உள்ள ராம்பூர், கட்டவுலி எம்எல்ஏ தொகுதிகள்,  ராஜஸ்தானின் சர்தார்ஷாஹர் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் குர்ஹானி சட்டமன்றத்  தொகுதி, சட்டீஸ்கரின் பானுபிரதாப்பூர் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றிற்கு  வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்’ என்று அறிவித்தது. அதையடுத்து மேற்கண்ட ஒரு எம்பி மற்றும் 5 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை இன்று அறிவித்துள்ளது.

அதன்படி மெயின்புரி எம்பி தொகுதிக்கு ரகுராஜ் சிங் ஷக்யாவும், மீதமுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மெயின்புரி எம்பி தொகுதியானது மறைந்த முலாயம் சிங் யாதவின் கோட்டை என்பதால், அவரது மருமகளும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்த டிம்பிள் யாதவ், தற்போது தனது மாமனார் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கடந்த காலங்களில் முலாயம் சிங் யாதவின் மெயின்புரி தொகுதியில் எதிர்கட்சிகளின் சார்பில் பலமான வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள்.

ஆனால், தற்போது டிம்பிள் யாதவை எதிர்த்து பாஜக சார்பில்  ரகுராஜ் சிங் ஷக்யா களம் இறக்கப்பட்டுள்ளதால் பலமான போட்டி ஏற்பட்டுள்ளது. இவர், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பியாக இருந்த நிலையில், இந்தாண்டு சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இந்த நிலையில் அவருக்கு பாஜக தலைமை சீட் கொடுத்துள்ளதால், மெயின்புரி இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், முலாயம் சிங் யாதவின் சகோதரரான சிவ்பால் யாதவ் பாஜக பக்கம் உள்ளதால்,  மெயின்புரி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories: