எண்ணூர் மாநகராட்சி பள்ளி மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

திருவொற்றியூர்: எண்ணூர் நெட்டு குப்பத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் நெட்டு குப்பத்தில் சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளி உள்ளது. 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் 5 ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி பல நாட்களாக பழுதடைந்துள்ளது. இதனால் மழை காலத்தில் கசிவு ஏற்பட்டு மாணவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதையடுத்து கவுன்சிலர் நிதி ரூ.14 லட்சம் செலவில் பள்ளி வகுப்பறை மற்றும் சமையல் கூடத்தை சீரமைக்க வேண்டும் என கவுன்சிலர் சிவக்குமார் மாநகராட்சியில் தீர்மானம் கொடுத்தார்.

ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழை பெய்து வரும் நிலையில், கட்டிடம் இடிந்து விழக்கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி பள்ளி வராண்டாவில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் லெஸ்லி  இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்து அவரது அறையை திறந்தார். அப்போது, அந்த அறையின் சிமென்ட் பூச்சு மின் விசிறியோடு பெயர்ந்து மேஜை, நாற்காலி முழுதும் சிதறி கிடந்தது. இதை பார்த்ததும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே மாணவர்களை வகுப்பறைக்குள் அனுப்பாமல் தடுத்து நிறுத்தினர். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்தனர்.

மேலும் கவுன்சிலர் சிவகுமார், இந்த தகவலை மாநகராட்சி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். உடனே மண்டல உதவி ஆணையர் சங்கரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்ளிட்டோரும் விரைந்தனர். மாணவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வகுப்பு நடத்தவும் பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்டவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: