சபரிமலை ஐயப்பன் சீசன் துவங்குவதை முன்னிட்டு மீனாட்சி கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்

* நவ.17ல் கார்த்திகை கொடியேற்றம்

* டிச.6ம் தேதி லட்ச தீபம்

மதுரை: கார்த்திகை 1ம் தேதி ஐயப்பன் மற்றும் பழநி முருகனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. வரும் 17ம் தேதி கோயிலில் கார்த்திகை கொடியேற்றம், டிச.6ம் தேதி அன்று லட்ச தீபம் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. மதுரையின் ஆன்மிக அடையாளப் பெருமைக்குரியது மீனாட்சியம்மன் கோயில். நாளுக்கு நாள் இக்கோயிலுக்கான பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதிலும் கார்த்திகை பிறந்தாலே, ஐயப்பன், முருகன் கோயில்களுக்கென மாலையிட்டு செல்லும் பக்தர்கள் கூட்டம் மீனாட்சி கோயிலுக்கு அதிகவு வரும்.

பொதுவாக மாலையிட்டு கோயிலுக்கு செல்கிற அத்தனை பேரும், மதுரையை கடந்தாலே மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்தையும் கட்டாயம் முடித்து விட்டே செல்வது தொன்று தொட்ட வழிமுறையாக இருந்து வருகிறது. மதுரைக்கு வந்து போகிற பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும் ஆண்டுதோறும் மாவட்ட, மாநகராட்சி, அறநிலைத்துறை மற்றும் காவல்துறையினர் சிறப்பு வசதிகளை மேற்கொள்வர். கொரோனா காலத்திற்கு பிறகு ஆன்மிக தலங்களுக்கான வருகை அதிகரித்துள்ள நிலையில், இந்தாண்டு கூடுதல் வசதிகள் செய்யப்படுகின்றன. ஓராண்டின் அத்தனை மாதங்களும் திருவிழா காண்கிற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் கார்த்திகை உற்சவம், அதிக பக்தர்கள் வருகையால் கூடுதல் கவனம் கொள்கிறது.

கார்த்திகை திருநாளை ஒட்டி வரும் கார்த்திகை 1ம் தேதி(நவ.17) காலை 10.30 மணி முதல் 10.54 மணிக்குள் மகர லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அன்று முதல் கார்த்திகை 10ம் நாள் வரை திருவிழா நடைபெறவுள்ளது. உற்சவம் 10 நாட்களும் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஆடி வீதி புறப்பாடாகியும், 6ம் நாளில் திருக்கார்த்திகை அன்று மாலை கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மாலை 7 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி தேரடி அருகில் பூக்கடை தெருவிலும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிக்கு எழுந்தருள்வர்.

இந்த இரு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும். எனவே உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் மற்றும் உபய வைரக்கீரிடம் ஆகிய விசேடங்கள் எதுவும் நடைபெறாது. கார்த்திகை 1ம் தேதி மாலை அணிந்து, ஐயப்பன் மற்றும் பழனி முருகன் கோயில்களுக்கு விரதம் துவங்கி, ஒரு மண்டலம் என்னும் 48 நாட்கள் விரதத்தை கடைபிடித்தல் ஐதீகம். இவ்வகையில் இந்த பக்தர்களுக்கான வசதிகள் மதுரை மீனாட்சி கோயிலில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா காலத்திற்கு பிறகு இந்த வருடம் பக்தர்கள் மாலை அணிந்து அதிகம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, அருகேயுள்ள மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவர். பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல வசதியாக சுவாமி தரிசனம் மற்றும் வாகன பார்க்கிங்கிற்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை வரும் பக்தர்கள் தங்குவதற்கு மேற்கு கோபுரம் அருகே மேலச்சித்திரை வீதியில் உள்ள பிர்லா தங்குமிடம் தற்போது திறக்கப்பட்டு, பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2 படுக்கை வசதி கொண்ட அறைக்கு பக்தர்களிடம் சலுகைக் கட்டணமாக நாளொன்றுக்கு ரூ.200 மட்டுமே பெறப்படுகிறது. மேலும் 3 படுக்கை வசதிகள் எனில் ஒருநாள் அறை வாடகை வெறும் ரூ.300தான்.

இதேபோல், எல்லீஸ் நகரில் மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான தங்குமிடம் உள்ளது. இங்கு 2 படுக்கை வசதி கொண்டது ரூ.300க்கும், 4 பேர் படுக்கை வசதி கொண்டது ரூ.900ம் எனவும் சலுகைக் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இங்கு ஓய்வுக் கூடத்துடன், 50 பேர் தங்குவதற்கான படுக்கை வசதி கொண்ட ஹால் உள்ளது. இங்கு ஒரு நபருக்கு ஒரு நாள் வாடகை கட்டணம் ரூ.75 மட்டுமே பெறப்படுகிறது. வாகனம் நிறுத்துமிடம், குளியல், கழிப்பறை வசதிகளும் குறைந்த கட்டணத்தில் இவ்விரு இடங்களிலும் செய்யப்பட்டுள்ளன. எல்லீஸ் நகர் தங்குமிடத்திலிருந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு ரூ.10 கட்டணத்தில் அரசு பஸ் வசதியும் உண்டு. எல்லீநகரிலிருந்து மீனட்சி கோயில் அருகே ஜான்சி ராணி பூங்கா அருகேயுள்ள இடத்தில் வந்து இறக்கி விடப்படும்.

இங்கிருந்து எல்லீஸ்நகர் திரும்புவதற்கும் அரசு பஸ் வசதி உண்டு. இதுதவிர, மீனாட்சி கோயிலின் 5 கோபுர வாசல்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதியோர்கள் உள்ளிட்டோருக்கு பேட்டரி கார் வசதியும் உள்ளது. தெற்கு கோபுர வாசல் மற்றும் கிழக்கு, வடக்கு கோபுர மூலைப்பகுதிகளில் மதுரை மாநகராட்சி சார்பில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோயிலுக்குள் பிரசாத ஸ்டால்கள் தவிர, வெளி பக்தர்கள் வசதிக்கென புதுமண்டபப் பகுதியிலும் கோயில் சார்பில் பிரசாத ஸ்டால் அமைக்கப்பட்டு, சுகாதார முறையில் சுவையான, விலை குறைவில் பிரசாத விற்பனையும் செய்யப்படுகிறது என்று கூறினார்.

சிறப்பு குழு அமைப்பு

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் வாகன காப்பகத்துடன் மீனாட்சி கோயில் சார்பிலான தங்குமிடம் இருக்கிறது. இங்கு ஐயப்ப சேவா சங்கம் சார்பிலும் தினமும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மதுரை வரும் பக்தர்களுக்கென போலீசார் சிறப்பு குழுக்கள் அமைத்து போக்குவரத்து சீரமைப்பு மற்றும் கண்காணிப்பு, தகவல் உதவி வழிகாட்டல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர்.

Related Stories: