மேற்படிப்பை தொடர முடியாத ஏழை மாணவர்கள் கயத்தாறில் அரசு பாலிடெக்னிக், கலை, பொறியியல் கல்லூரி அமைக்கப்படுமா?

கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு வளர்ந்து வரும் நகரம். கடந்த 2016 முதல் தனி தாலுகா அந்தஸ்து பெற்றுள்ள கயத்தாறைச் சுற்றி 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கயத்தாறு யூனியனில் 45 கிராம பஞ்சாயத்துகளும், கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை ஆகிய பேரூராட்சிகளும் உள்ளன. பல்வேறு சிறப்புகளை கொண்ட கயத்தாறில் பொறியியல், கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் இல்லை. இப்பகுதியில் நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் ஏராளமாக உள்ளன.

இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களின் உயர் படிப்பிற்கோ, தொழிற்கல்வி கற்கவோ நெல்லை அல்லது கோவில்பட்டி நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயண நேரம் வீணாவதுடன், பொருட்செலவும் ஏற்படுகிறது. மேலும் சுற்றுவட்டார பகுதி மக்கள், கயத்தாறுக்கு வந்தால்தான் வெளியூர்களில் இருக்கும் கல்வி கூடங்களுக்கு செல்ல முடியும். கிராமப்பகுதிகளில் இருந்து போதிய பஸ் வசதி இல்லாததால் அவர்கள் கயத்தாறு வந்து வெளியூர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஏழை மாணவர்கள் தங்களின் மேற்படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பலரது பாலிடெக்னிக், பொறியியல், கலை அறிவியல் உயர்கல்வி எட்டாக்கனியாகி விடுகிறது.

இதுகுறித்து கயத்தாறு பேரூராட்சி துணை தலைவர் சபுரா சலீமா கூறியதாவது: கயத்தாறு பகுதியில் பொறியியல், கலைக்கல்லூரி மற்றும் தொழிற்கல்வி நிலையங்கள் அமைய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து கடந்த நவ.1ம் தேதி கயத்தாறு பேரூராட்சி 10வது வார்டில் நடந்த சிறப்பு வார்டு குழு, பகுதி சபா கூட்டத்தில் விளக்கி பேசினேன். அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட கோரிக்கை தீர்மானத்திலும் இதுபற்றி குறிப்பிட்டு மனு அளித்துள்ளேன்.

மேலும் 15 வார்டுகளை கொண்ட கயத்தாறு பேரூராட்சி பகுதியில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா இல்லை. பூங்கா அமைக்கப்பட்டால் சிறுவர்களுக்கு மன மகிழ்ச்சிக்கும், பெரியவர்களுக்கு மன இறுக்கத்தை குறைக்கும் விதமாகவும் அமையும். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், கயத்தாறு பகுதி பொதுமக்கள், மாணவர்களின் இவ்விரு கோரிக்கைகள் மீது சிறப்பு கவனம் மேற்கொண்டு நிறைவேற்றினால் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருக்கும், என்றார்.

Related Stories: