ஜி-20 மாநாட்டையொட்டி பைடன்-ஜின்பிங் சந்திப்பு: வேறுபாடுகளை அகற்ற பரஸ்பரம் ஒப்புதல்

நுசா துவா: இந்தோனசியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டையொட்டி சந்தித்த அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஜின்பிங் இருநாடுகளுக்கு இடையேயான போட்டிகளை விலக்கி, வேறுபாடுகளை களைந்து மாநாட்டில் பங்கேற்க உறுதி பூண்டனர். இந்தோனேசியா நாட்டின் தலைநகர் பாலியில் 17வது ஜி-20 உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். நிலையில், பாலியில் ஜி-20 மாநாடு நடக்க உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் அதிபர் பைடன், ஜின்பிங் நேற்று சந்தித்துப் பேசினர். அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்று 2 ஆண்டுகளான பின், 3வது முறை சீன அதிபராக தேர்வான ஜின்பிங் ஆகியோர் முதல் முறையாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிய அதிபர் பைடன், ``இரு நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில், சீனாவும் அமெரிக்காவும் போட்டிகளை தவிர்த்து, வேறுபாடுகளை களைந்து, உலக அளவிலான பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வழிகளைக் காண வேண்டும். இதற்கான பொறுப்பை உணர்ந்து, பரஸ்பர ஒத்துழைப்பு அளிக்க ஒப்பு கொள்ளப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் எங்கே பிரச்சினை ஆரம்பமாகிறது என்பதை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணப்பட உள்ளது,’’ என்று தெரிவித்தார். பின்னர் பேசிய சீன அதிபர் ஜின்பிங், ``சீனா-அமெரிக்க இடையேயான உறவை வலுப்படுத்தும் சரியான நடைமுறைகளை பின்பற்றவும், வலுவான மற்றும் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்திற்குத் தயாராக இருப்பதாகவும் பைடன் தெரிவித்தார்,’’ என்று கூறினார்.

* ரஷ்ய அமைச்சருக்கு உடல் நலக்குறைவு

ஜி-20 மாநாட்டிற்காக பாலி வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இந்தோனேசியா அரசு மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ரஷ்ய வெளியுறவு  அமைச்சகத்தின் ஊடக பிரிவு செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா, ``இதை நம்பமுடியவில்லை. இது போலி செய்தி,’’ என்று மறுத்துள்ளார். அதே நேரம், ``லாவ்ரோவ் டென்பசாரில் உள்ள சங்லா மருத்துவமனைக்கு சென்றதாகவும் பரிசோதனை முடிந்து உடனே திரும்பி விட்டார்,’’ என்று பாலி ஆளுநர் வயன் கோஸ்டர் கூறினார்.

Related Stories: