நாட்டின் பாதுகாப்பிற்கு கட்டாய மதமாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தல்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ‘கட்டாய மதமாற்றம் என்பது நாட்டின் தீவிரமான பிரச்னை’ என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். குறிப்பாக மிரட்டி, பணம் கொடுப்பதாக ஆசைகாட்டி கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக நடக்கும் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதத்தில், ‘‘மதம் என்பது தனிநபர் உரிமை சம்பந்தப்பட்டது. கடவுளை வழிபட அனைவருக்கும் உரிமை உள்ளது. இருப்பினும் மதமாற்றம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அதாவது பயம் காட்டியோ அல்லது பணத்தை கொடுத்தோ மதம் மாற்றம் செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதுகுறித்த சட்டமும் இயற்ற வேண்டும்’’ என தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘கட்டாய மதமாற்றம் என்பது மிகவும் நாட்டின் முக்கியமான மற்றும் தீவிரமான பிரச்னை. அது நாட்டில் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை பாதிப்படைய செய்கிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்து பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: