ஐஐடி வளாகத்தில் தனியாக நடந்து சென்ற மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் அதிரடி கைது: மாணவிகள் அதிர்ச்சி

சென்னை: ஐஐடி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை ஐஐடி வளாகத்துக்குள் நடந்த சம்பவம் மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கிண்டி ஐஐடியில் ஏராளமான பல்வேறு மாநில, மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த வளாகத்தில் அடர்ந்த வனப்பகுதியும் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஆட்கள் நடமாட்டம் இல்லை.

இந்நிலையில், அங்கு பயிலும் மாணவி ஒருவர் தனது நண்பர்களை சந்தித்து விட்டு ஐஐடி வளாகத்தில் உள்ள தனது அறைக்கு தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், தனியாக நடந்து வரும் மாணவியை மடக்கி, பைக்கில் ஏறும்மா.... அப்புறம் பேசிக்கலாம்... என்று தவறான நோக்கத்தில் அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்துள்ளார். அதை பொருட்படுத்தாத அந்த வாலிபர், மாணவியின் கையை பிடித்து இழுத்து தனது பைக்கில் ஏற்ற முயன்றுள்ளார். பயந்து போன மாணவிக்கு தமிழ்மொழி தெரியாததால், ஆங்கிலத்தில் அந்த வாலிபரை திட்டியுள்ளார்.

அதற்கு அந்த வாலிபர், ‘உனக்கு ஆங்கிலம் எல்லாம் தெரியுமா’ என்று கிண்டலடித்துள்ளார். மேலும், அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் மாணவி தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அங்கிருந்த சிலர் வந்ததால் அந்த வாலிபர் பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து அந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில், வேளச்சேரியை சேர்ந்த வசந்த் எட்வர்ட் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு மிகுந்த சென்னை ஐஐடி வளாகத்துக்குள் தனியாக நடந்து வந்த மாணவியிடம் வாலிபர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: