கச்சிராயபாளையம் அருகே தாவடிப்பட்டு ஆற்றுப்பாலம் உள்வாங்கியது: வாகன போக்குவரத்துக்கு தடை

சின்னசேலம்: கச்சிராயபாளையம் அருகே தாவடிப்பட்டு ஆற்றுப்பாலம் உள்வாங்கிய நிலையில் இருப்பதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா கச்சிராயபாளையம் அருகே தாவடிப்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கும் சேஷசமுத்திரம் கிராமத்திற்கும் இடையில் நீண்ட தரைப்பாலம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.

அதாவது தாவடிப்பட்டில் இருந்து சேஷசமுத்திரம், நெடுமானூர், சமத்துவபுரம், சங்கராபுரம்,  கரடிசித்தூர், திருக்கனங்கூர், பால்ராம்பட்டு, கச்சிராயபாளையம் உள்ளிட்ட கிராமங்களிடையே போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த தரைப்பாலம் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தற்போது பெரிய அளவில் சேதமடைந்து இருப்பதுடன், தரைப்பாலத்தின் ஒரு பகுதி உள்வாங்கியதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளப்பெருக்கினால் ஆற்றில் கட்டப்பட்ட அடித்தளம் அரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் தாசில்தார் இந்திரா, கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வக்குமார், தோப்புக்காரன் உள்ளிட்டோருடன் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் கள்ளக்குறிச்சி ஒன்றிய பொறியாளரும் வந்து பாலத்தின் உறதி தன்மையை ஆய்வு செய்து பலவீனமாக இருப்பதாக கூறினார். இதையடுத்து பாலத்தில் பாரம் ஏற்றி செல்லும், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், பாலத்தின் இருபுறமும்  மரத்தை வெட்டி போட்டு போக்குவரத்தை  தடை செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா கூறுகையில் தரைப்பாலம் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. ஆகையால் பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் யாரும் கனரக வாகனங்களில் பாலத்தை கடக்க வேண்டாம் என அறிவுரை வழங்கினார்.

Related Stories: