2 ஆண்டுகளுக்கு பின் களை கட்டுகிறது கன்னியாகுமரியில் 17ம்தேதி சீசன் தொடக்கம்-பாதுகாப்பு பணிக்கு பட்டாலியன் போலீஸ் வருகை

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் 17ம் தேதி முதல் சீசன் தொடங்க உள்ள நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட வேண்டிய பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

 சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். முக்கடல் சங்கமிக்கும் இங்கு, கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. தற்போது திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் படகு போக்குவரத்து நடக்கிறது.

 விடுமுறை நாளான கடந்த இரு தினங்களாக  கன்னியாகுமரியில் ஏராளமான  சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலை  முக்கடல் சங்கமம் கடற்கரையில்  திரண்டு சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.  மேலும் கடலில் நீராடி பகவதி  அம்மனை தரிசித்தனர். பின்னர் விவேகானந்தர்  நினைவு மண்டபம் செல்ல  படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து  ஆர்வத்துடன் படகில் சென்று  பார்த்து ரசித்து திரும்பினர். சுற்றுலா  பயணிகள் வருகையால் கன்னியாகுமரி  களை கட்டியது. இதனால் வியாபாரிகளும்  மகிழ்ச்சி அடைந்தனர். கடற்கரை  பகுதியில் சுற்றுலா போலீசார் மற்றும்  கடலோர பாதுகாப்பு குழும போலீசார்  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் (பொங்கல் வரையிலான கால கட்டம்) வரை ஐயப்ப பக்தர்கள் சீசன் காலமாக பார்க்கப்படுகிறது. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்கள் சபரிமலைக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள்  கன்னியாகுமரிக்கும் வந்து கடலில் நீராடி, பகவதியம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இந்த கால கட்டம் தான் கன்னியாகுமரியில் சீசன் காலமாக பார்க்கப்படுகிறது.

 கடந்த இரு ஆண்டுகளாக கொரோனாவின் கோர பிடி காரணமாக கன்னியாகுமரி அடியோடு முடங்கியது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சீசன் கால கட்டத்தை கன்னியாகுமரி வியாபாரிகள் பெருமளவில் எதிர்பார்த்துள்ளனர். இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 17ம் தேதி கார்த்திகை 1 ஆகும். டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நிறைவடைகிறது. பின்னர் ஜனவரியில் மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கால கட்டம் என்பதால் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலைக்கு குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் தான் வந்திருந்தனர். இந்த வருடம் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் சீசன் காலத்தையொட்டி குமரி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பேரூராட்சி நிர்வாகம் இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்ய தொடங்கி உள்ளன. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், சீசன் கால கடைகள் அனுமதிக்கப்படாது என தெரிகிறது. பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பார்க்கிங் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்படுகிறது. எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவின் பேரில், வெளி மாவட்ட பட்டாலியன் போலீசார் பாதுகாப்புக்காக வர உள்ளனர். ஷிப்ட் முறையில் இவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஐயப்ப பக்தர்களிடம் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் தனிப்படை போலீசாரும் மப்டி உடையில் கண்காணிக்க உள்ளனர்.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கூறுகையில், கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே சீசன் கடைகள் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்க முடியும். மற்றபடி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகள்  வழக்கம் போல் செய்யப்படும். மின் விளக்கு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் முன் வர வேண்டும் என்றார்.

Related Stories: