பகலில் தூறல்.. இரவில் தூள்...! தூங்கா நகரில் தொடரும் கனமழை: விரிவாக்க பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது

மதுரை: மதுரை நகர், புறநகரில் பகல், இரவில் தூறலுடன் விட்டு விட்டு கனமழையாக தொடர்கிறது. இதனால் விரிவாக்க பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. மாவட்ட, மாநகராட்சி, தீயணைப்பு மீட்பு துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளனர். வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் துவங்கிய நிலையில், வங்கக்கடலில் கடந்த 4 நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, அரபிக்கடலை நோக்கி செல்கிறது. இதனால் மதுரை நகரில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காலையில் இருந்து மழை தூறி கொண்டே இருந்த நிலையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. இந்த மழை நேற்று காலையில் இருந்து தூறலாகவும், கனமழையாகவும் மாலை வரை நீடித்தது. இதனால் மதுரை மாவட்டத்தின் தாழ்வான விரிவாக்க குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. 2 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, பொதுமக்கள் வீதிகளில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு தெருக்கள் மிக மோசமானது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். அதேபோல் புறநகரில் விட்டு விட்டு தூறல் மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று மாலை வரை சூரிய ஒளியை பார்க்க முடியவில்லை. மாலையில் சிறிது நேரம் சூரியன் தென்பட்டது. நேற்று மழையால் பொதுமக்களின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று விடுமுறை நாளாக இருந்த போதிலும் பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே முடங்கினர். மதுரை மாவட்டத்தில் நேற்று 658 மில்லி மீட்டரும், சராசரியாக 29.91 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 57.20 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக கள்ளிக்குடியில் 10.60 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் நேற்று திருமங்கலம், மதுரை விமான நிலையம், மதுரை வடக்கு பகுதியில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இம்மாதத்தில் மட்டும் கடந்த 3, 7, 10, 11, 12 என 5 நாட்கள் மதுரை மாவட்டத்தில் மழை பெய்துள்ளது. மதுரையில் தொடர் மழை காரணமாக வெப்பம் குறைந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. கனமழை தொடரும் நிலையில் வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாவட்ட, மாநகராட்சி, தீயணைப்பு மீட்பு துறை உள்ளிட்டவை முடுக்கி விடப்பட்டுள்ளன. விரிவாக்க பகுதிகளில் புகுந்த வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தரைப்பாலம் மூழ்கியதால், தடுப்பு ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: