டெல்லி முதல்வர், மாஜி அமைச்சர் உட்பட 3 பேரும் ‘பாலிகிராஃப்’ சோதனை செய்வோம்: இடைத்தரகர் சுகேஷின் 3வது கடிதம் ரிலீஸ்

புதுடெல்லி: டெல்லி முதல்வர், முன்னாள் அமைச்சருடன் நானும் ‘பாலிகிராஃப்’ சோதனை செய்து கொள்ள தயாராக இருப்பதாக  இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். பணமோசடி வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அவரது வழக்கறிஞர் மூலம் ஆளுநருக்கு பரபரப்பு கடிதத்தை எழுதி அனுப்பி வருகிறார். தற்போது தனது மூன்றாவது கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘கெஜ்ரிவால் அவர்களே! டெல்லி அரசுப் பள்ளிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உரிய ஏற்பாடு செய்யும்படி என்னிடம் எதற்காக கேட்டீர்கள்? அமெரிக்காவின் ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ போன்ற பத்திரிகைகளில் செய்திகள் வருவதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்தீர்கள்; அதற்கான பணத்தையெல்லாம் அமெரிக்கக் கணக்கில் போடச் சொன்னீர்கள்; ஆனால் முழுப் பணத்தையும் பணமாக  எதற்காக சத்யேந்திர ஜெயின்  தரச் சொன்னார்? எனது ‘பாலிகிராஃப்’ (உண்மை கண்டறியும்) சோதனைக்கு நான் தயாராக இருக்கிறேன்.

நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. நீங்கள் சொல்வது சரியென்றால், உங்களுக்கும் (கெஜ்ரிவால்) சத்யேந்தர் ஜெயினுக்கும் பாலிகிராஃப் சோதனைகள் செய்யப்பட வேண்டும். நாம் மூவரும் பாலிகிராஃப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் கடித குற்றச்சாட்டுகளுக்கு ஆம்ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்து வருகிறது.

Related Stories: