800 கோடி தொட்டது உலக மக்கள் தொகை: சீனாவை முந்தும் இந்தியா

நியூயார்க்: உலக மக்கள் தொகை வரும் 15ம் தேதியுடன் 800 கோடியை தொடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினத்தன்று ஐநா வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில், நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என கணித்திருந்தது. தற்போது நாட்கள் நெருங்கிவிட்டதால், இந்த புள்ளிவிவரங்கள் மீண்டும் கவனத்தை பெற்றுள்ளன. ஏற்கனவே, உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டி விட்டதாக அமெரிக்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகையானது சராசரியாக 1.10 சதவீதம் அதிகரிக்கிறது. இதில் கொரோனாவால் 2020ம் ஆண்டு மட்டும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக மக்கள் தொகை பதிவானது. ஐநா கணிப்புப்படி அடுத்த ஆண்டு, அதாவது இன்னும் ஒன்றரை மாதத்தில் அதிக மக்கள் தொகை நாடு என்ற சீனாவின் சாதனையை இந்தியா முறியடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 2030ல் உலக மக்கள் தொகை 850 கோடியாகவும், 2050ல் 970 கோடியாகவும், 2080ல் 1040 கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2050ல் அதிகரிக்கும் மக்கள் தொகையில் 50 சதவீதத்தை காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளே கொண்டிருக்கும் எனவும் ஐநா கூறி உள்ளது.

Related Stories: