தலைமை நீதிபதியாக நியமனம் சந்திரசூட்க்கு எதிர்ப்பு ரூ.1 லட்சம் அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மனுதாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட், கடந்த 9ம் தேதி பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி  திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கிராம் உதய் அறக்கட்டளை என்ற அமைப்பின் தலைவர் சஞ்சீவ் குமார் திவாரி பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவில் முகாந்திரம் ஏதும் இல்லை எனக் கூறி, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், விளம்பரத்திற்காக மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் நீதிபதிகள் அவரை கண்டித்தனர். ஏற்கனவே, கடந்த வாரம் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட இதேபோன்ற மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

Related Stories: