திருப்பதி லட்டு பிரசாதம் எடைகுறைவுடன் விற்பனையா? தேவஸ்தானம் விளக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு தேவை என்றால் ஒரு லட்டு ரூ.50 என விற்கப்படுகிறது. இந்த லட்டின் எடை குறைத்திருப்பதாக பக்தர் ஒருவர் வீடியோ வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். இதற்கு தேவஸ்தான நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமலையில் லட்டு பிரசாதம் 160 கிராம் முதல் 180 கிராம் வரை இருக்கும். தினமும் லட்டு தயாரிக்கும் பணியில் உள்ள ஊழியர்கள் தயாரித்த லட்டுகள் தனித்தனி ட்ரேவில் வைக்கின்றனர்.

பின்னர், ஒவ்வொரு ட்ரேவும் எடை போட்டு அதிகாரிகள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. இதையடுத்து லட்டு பிரசாதங்கள் கவுன்டர்களுக்கு கொண்டு சென்று பக்தர்களுக்கு வழங்கப்படும். எனவே, முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுகிறது. எடைபோடும் பணியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மைனஸ் 70 ஆகவும், ஒப்பந்த ஊழியர்களுக்கு போதிய புரிதல் இல்லாததாலும் லட்டு எடை குறித்து பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். லட்டு எடை சரியாக 160 முதல் 180 கிராம் வரை இருக்கும். லட்டு பிரசாதம் பல நூறு ஆண்டுகளாக மிகுந்த பக்தியுடன் தயாரிக்கப்படுகிறது. லட்டுகளின் எடை மற்றும் தரத்தில் தேவஸ்தானம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை.

லட்டு கவுன்டர்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அங்கு கிடைக்கும் லட்டு கவுன்டரில் உள்ள அதிகாரியிடம் தெரிவித்தால் உடனடியாக பிரச்னை தீர்க்கப்படும். ஆனால், பக்தர் ஒன்றும் கூறாமல் சமூக வலைதளங்களில் தேவஸ்தானத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது வருத்தமளிக்கிறது. எனவே, பக்தர்களுக்கு வழங்கும் லட்டுகளின் அளவு மற்றும் எடையில் எந்த வித்தியாசமும் இல்லை. சமூக வலைதளங்களில் வரும் தவறான கருத்துக்களை பக்தர்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: