திருவண்ணாமலை அருகே போலீஸ் சோதனை பெங்களூருவில் இருந்து கடத்திய குட்கா சுற்றுலா பஸ்சுடன் பறிமுதல்

*மற்றொரு பஸ்சில் மதுபாட்டில்கள் சிக்கியது

பெண் உட்பட 3 பேர் அதிரடி கைது

திருவண்ணாமலை : பெங்களூருவில் இருந்து குட்கா கடத்திய தனியார் சுற்றுலா பஸ் மற்றும் அரசு பஸ்சில் கடத்திய உயர்ரக மதுபாட்டில்களை திருவண்ணாமலை அருகே போலீசார் சோதனையில் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தனியார் பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக செல்லும் பஸ்சில் குட்கா மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படையினர் நேற்று அதிகாலை திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் அத்தியந்தல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற தனியார் சுற்றுலா பஸ்சில் இருந்த பார்சலில் 32 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து காரைக்கால் பகுதிக்கு இந்த பார்சல் கொண்டுசெல்லப்பட்டது. தெரியவந்தது.எனவே, சம்மந்தப்பட்ட தனியார் சுற்றுலா பஸ்சை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பஸ்சின் டிரைவர்களான மனோகரன்(54), தியாகராஜன்(48) ஆகியோரை கைது செய்தனர்.

ேமலும், பெங்களூருவில் இருந்து விருதாச்சலத்துக்கு திருவண்ணாமலை வழியாக சென்ற அரசு பஸ்சில் நடத்திய சோதனையில், 262 உயர்ரக மதுபாட்டில்கள் பைகளில் மறைத்து கொண்டுசென்றது தெரியவந்தது. எனவே, அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, மதுபாட்டில்களை கடத்தியதாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி தனம்(52) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், மதுபாட்டில்கள் கள்ளக்குறிச்சிக்கு கடத்தியது தெரியவந்தது.

மேலும், பஸ்சில் சந்தேகத்துக்குரிய பொருட்களை கொண்டுவருவது தெரிந்தால், அனுமதிக்கக் கூடாது என அரசு பஸ் டிரைவர் மற்றும் கன்டக்டரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இதுதொடர்பாக, திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: