திருச்சி விமான நிலையத்திலிருந்து அரசு பள்ளி மாணவர்கள் 67 பேர் துபாய் பயணம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் புறப்பட்டனர்

திருச்சி: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக மாநில அளவில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இணைய வழியில் விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்ேவறு மாவட்டங்களை சேர்ந்த 67 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் துபாய்க்கு கல்வி சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவில் பங்கேற்கின்றனர்.

நேற்றுமுன்தினம் இரவு திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட 67 மாணவ, மாணவிகளும், ஆசிரியர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை அனைவரும் விமான நிலையம் வந்தனர்.  அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் அமுதவல்லி, 2 அதிகாரிகள், 5 ஆசிரியர்கள், 34 மாணவர்கள், 33 மாணவிகள் என 75 பேர்,  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஷார்ஜா புறப்பட்டு சென்றனர். ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவில் பங்கேற்கும் அவர்கள், பின்னர் துபாய் மற்றும் அபுதாபி போன்ற இடங்களில் 13ம் தேதி வரை சுற்றுப்பயணம் செல்கின்றனர். இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், விமானத்தில் செல்வது இதுதான் முதல் முறை.

மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளது. வெளிநாடு செல்வதற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மற்றும் தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர். விமான நிலையத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில், ஒன்றிய அரசின் தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தி வருவதாக பாஜ அமைச்சர்கள், மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தொடர்ந்து தவறாக பேசி வருகின்றனர். ஆனால் நாங்கள் கல்விக்கு என்று தனியாக ஒரு கொள்கை வகுத்து கொண்டிருக்கிறோம். அதன் வரைவு அறிக்கை வரும் டிசம்பர் மாதம் கிடைக்கும். அதன் பின்னர் தமிழகம் எந்த கல்விக்கொள்கையை பின்பற்றுகிறது என்பது அவர்களுக்கே தெரிய வரும் என்றார்.

Related Stories: