உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு: ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து, நாட்டின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை கடந்த மாதம் 17ம் தேதி ஜனாதிபதி முர்மு நியமித்தார். இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட் நேற்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சந்திரசூட் வரும் 2024ம் ஆண்டு நவ. 10ம் தேதி வரை 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

கடந்த 1959ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மும்பையில் பிறந்த சந்திரசூட், டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். டெல்லி பல்கலை.யில் எல்எல்பி சட்டப் படிப்பை முடித்தார். பின்னர், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் எல்எல்எம், முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து, பம்பாய் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1998ல் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார். 2016ம் ஆண்டு மே 13ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியானார். அயோத்தி ராமர் கோயில் வழக்கு, மக்களின் தனியுரிமை, ஆதார், ஓரினச்சேர்க்கை, கருக்கலைப்பு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளார்.

* பிரதமர் பங்கேற்கவில்லை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி, பிரதமரும் பங்கேற்க வேண்டும் ஆனால், சந்திரசூட்டின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல், இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்கு முன், அனைத்து தலைமை நீதிபதிகளின் பதவியேற்பு விழாவிலும் அவர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற சந்திரசூட்டுக்கு வாழ்த்துகள். அவருடைய பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்,’ என்று தெரிவித்துள்ளார்.

* மக்களுக்காக பணியாற்றுவேன்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சந்திரசூட் கூறுகையில், ‘பொது மக்களுக்கு சேவை செய்வதே எனது முன்னுரிமை. நாட்டின் அனைத்து குடிமக்களுக்காகவும் பணியாற்றுவேன். இந்திய நீதித்துறைக்கு தலைமை தாங்குவது ஒரு சிறந்த வாய்ப்பு; பொறுப்பும் கூட. குடிமக்களின் நம்பிக்கையை வார்த்தைகளால் மட்டுமல்ல, எனது பணியின் மூலமாகவும் உறுதி செய்வேன்,’ என்று தெரிவித்தார்.

தந்தையும் தலைமை நீதிபதி

* தலைமை நீதிபதி சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி.சந்திரசூட்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி  வகித்துள்ளார். இவர், 1978ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி முதல் 1985ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி வரை இப்பதவியில் இருந்தார். இந்த பதவியில் நீண்ட காலம் இருந்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

* கடந்த செப்டம்பர் 30ம் தேதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான வேலை நேரத்தை விட இரவு 9:10 மணி வரை அமர்ந்து, ஒரே நாளில் 75 வழக்குகளை விசாரித்தது.

Related Stories: