பாபர் மசூதி இடிப்பு அத்வானி விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜ மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி, குற்றம்சாட்டப்பட்ட பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி மற்றும் உபி முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் உள்ளிட்டோரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து அயோத்தியை சேர்ந்த ஹாஜி முகமது அகமது மற்றும் சயீத் அக்லாக் அகமது ஆகியோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் சின்கா மற்றும் சரோஜ் யாதவ் தலைமையிலான அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பளித்தது. மனுதாரர்கள் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது புகார்தாரர்களோ அல்ல என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: