உடுமலையில் அடிப்படை வசதி கேட்டு அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

உடுமலை :  உடுமலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் அடிப்படை வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலையில் எளைய முத்தூர் பிரிவு ரோடு பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 2,200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் முதலாம் ஆண்டு, 2ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் நீண்ட காலமாக அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை நிறைவேற்றி தருமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் எனக்கூறி 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேர் நேற்று வகுப்புகளை புறக்கணித்தும், கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆதரவாக முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால், வகுப்பறைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

கல்லூரி வளாகத்திற்குள் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு ஐடி கார்டு வழங்க வேண்டும் அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து, சம்பவம் அறிந்து விரைந்து வந்த உடுமலை போலீசார், முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: