தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்-திருச்சியில் போலீசார் அதிரடி

திருச்சி : தடை செய்யப்பட்ட வெளிநாடு சிகரெட்டுகள் திருச்சியில் நேற்று அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சியில் காந்திமார்க்கெட் மற்றும் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும், முறையான அனுமதியில்லாமலும் வெளிநாடு சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது பெரியசாமி டவர், பெரியகடைவீதியில் உள்ள கடைகளிலும் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் நிக்கோடின் அளவு இல்லாத தடை செய்யப்பட்ட வெளிநாடு சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு தெரிய வந்தது. இதையடுத்து ₹4000 மதிப்புள்ள வெளிநாடு சிகரெட் 40 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே இளைஞர்களையும், சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் கஞ்சா, குட்கா மற்றும் வெளிநாடு சிகரெட் பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Related Stories: