குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சையில் பலியானதாக இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்-கரூர் காந்திகிராமத்தில் பரபரப்பு

கரூர் : குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் பலியானதாக கூறி இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கரூர் காந்திகிராமம் பிரதான சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள கல்லுமடை பகுதியை சேர்ந்தவர் முகேஷ்குமார். கொத்தனார். இவரின் மனைவி ஜோதி(27). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளியணை அடுத்துள்ள உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று முன்தினம் காலை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதியாக, ஜோதிக்கு மருத்துவர், மயக்க ஊசி செலுத்திய போது, சுயநினைவை இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அருகில் இருந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஜோதியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.  அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் நேற்று முன்தினம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் கரூர்,திருச்சி சாலை காந்திகிராமம் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு டிஎஸ்பி தேவராஜ், இன்ஸ்பெக்டர் ஒம்பிரகாஷ் உட்பட போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இந்த சம்பவம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, உடலை வாங்க மாட்டோம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்களுக்கும், போலீசார்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து திரும்பவும் பேச்சு வார்த்தையில் போலீசார் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து முறைப்படி விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் முடிவில், நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: