28 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை திம்மராஜபுரம், ரகுமத்நகர் மக்களுக்கு அடிப்படை வசதிகள்-மாநகராட்சி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

நெல்லை : திம்மராஜபுரம், ரகுமத்நகர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாநகராட்சி குறைதீர் நாள் கூட்டத்தில் மேயரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் பி.எம். சரவணன் தலைமையில் நேற்று நடந்தது.துணை மேயர் கே.ஆர். ராஜூ, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 5வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகநாதன் தலைமையில் அப்பகுதி மக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் 5வது வார்டில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் திம்மராஜபுரம், ரகுமத் நகர், காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் பொதுமக்கள் குறைவாக வசிக்கும் விரிவாக்க பகுதியில் ரூ.3.55 கோடிக்கு சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே ஜனத்தொகை மிகுந்த திம்மராஜபுரம், ரகுமத் நகர் பகுதிகளில் சாலை மற்றும் குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

மழை கால முன்னெச்சரிக்கையாக கால்வாயில் தூர் வாரும் பணிகள் நடக்கும் ேபாது கவுன்சிலர்களுக்கே தகவல் தெரிவிப்பதில்லை. ஜேசிபி மூலம் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் பணிகளை நடத்தி விட்டு நாள் முழுவதும் பணிகள் நடந்தது போல கணக்கு காட்டுகின்றனர். எனவே எங்கள் பகுதியில் நடக்கும் பணிகளை மாநகராட்சி சார்பில் ஆய்வு செய்திட வேண்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையிருப்பு 2வது வார்டு பசும்பொன் நகர் பொதுமக்கள் சுப்பையா என்பவர் தலைமையில் அளித்த மனுவில், ‘‘ நாங்கள் 1985ம் ஆண்டு முதல் கரையிருப்பு 2வது வார்டு பசும்பொன் நகரில் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்து வருகிறோம். அங்குள்ள 25 குடும்பங்களுக்கு 28 ஆண்டுகளாக வீட்டு மனைப் பட்டா கிடைக்கவில்லை இதுகுறித்து நாங்கள் கலெக்டர், எம்எல்ஏ, மேயர் உள்ளிட்டோரிடம் பல ஆண்டுகளாக மனு அளித்துள்ளோம். எனவே எங்கள் மனு மீது நடவடிக்கை எடுத்து பட்டா வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை இந்திராநகர், சோனியா நகர், மேசியா நகர், காருண்யா நகர், சென்ட்ரல் நகர் உள்ளிட்ட நகர்களின் மக்கள் நல்வாழ்வு சங்க செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அப்பகுதி மக்கள் அளித்த மனுவில்,‘‘ காருண்யா நகர், பொன்விழா நகர் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும். மேசியா நகர் முகப்பில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் தேங்கி கிடக்கம் குப்பைகளை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை மாஸ் கிளினீங் தெருக்களில் சேரும் குப்கைளை அகற்ற வேண்டும். விரிவாக்கப்பணிகளுக்கு சீராக குடிநீர் கிடைக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தத் தேக்க தொட்டி மற்றும் சுற்றுச்சூழல் அமைத்துத் தர வேண்டும்.’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சி 37வது வார்டு வி.எம்.சத்திரம் பகுதி மக்கள் பொன்னுத்தாய் மற்றும் அதிமுக வக்கீல் அன்பு அங்கப்பன் தலைமையில் அளித்த மனுவில், ‘‘நெல்லை மாநகராட்சி 37வது வார்டு, வஉசி காலனி, சலவையாளர் காலனியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. வீட்டுத் தீர்வை, குடிநீர் இணைப்பு, குப்பைத்தொட்டி அமைத்தல், கழிவு நீர் கால்வாயை தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளை செய்து தர வேண்டும். தெரு முகப்பில் உள்ள காலியிடத்தில் பூங்கா அமைத்துத் தர வேண்டும். எங்கள் பகுதிக்கு மினி பஸ் வசதியும் செய்து தர வேண்டும்.’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: