சடலத்துடன் ஆற்றை கடப்பதற்கு முற்றுப்புள்ளி 10 ஏக்கர் ஆக்கிரமிப்புகள் அகற்றி சுடுகாட்டிற்கு பாதை ஏற்பாடு-கலெக்டர், எம்எல்ஏ நடவடிக்கை

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடியில் கலெக்டர், எம்எல்ஏ ஆய்வுக்கு பிறகு சுடுகாட்டிற்கு சுமார் 10 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் கையகப்படுத்தி அகற்றும் பணிகள் நேற்று தொடங்கியது. இனி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சடலங்களை தூக்கி செல்ல தேவையில்லை.ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் யாராவது இறந்தால் அங்குள்ள சுடுகாட்டிற்கு சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்வார்கள்.

ஆனால், இதில் உள்ள சிக்கல் ஆபத்தான முறையில் அங்குள்ள உத்திர காவிரி ஆற்றை கடந்து தான் சுடுகாட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்த நிலை காலம் காலமாக நடந்து வருகிறது. மேலும், ஆற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தண்ணீர் குறையும் வரை காத்திருந்து தான் சடலத்தை ஆற்றை கடந்து எடுத்து செல்ல முடியும்.

இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தது. ஆனாலும், ஆற்று புறம்போக்குகள் அனைத்தும் அகற்றி சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளிடமும் மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து, கலெக்டர், எம்எல்ஏ ஆகியோரிடமும் கோரிக்கை மனு சென்றது. அதன்படி, நேற்று முன்தினம் சேர்பாடி கிராமத்திற்கு சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்எல்ஏ நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது, ஆற்று பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, நேற்று தாசில்தார் ரமேஷ் தலைமையில், ஆர்ஐ நந்தகுமார் முன்னிலை சுடுகாட்டிற்கு வழியுடன் கூடிய சுமார் 10 ஏக்கர் ஆற்று புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்தி அதனை அகற்றும் பணிகள் நடந்தது.  இதனால், காலம்காலமாக இருந்து வந்த சுடுகாட்டு பிரச்சினைக்கு நேற்று நிரந்தரமாக தீர்வு காணப்பட்டது. அதேபோல், இனி எந்த காலத்திலும் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்க வேண்டியதில்லை என்று அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: