நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் சீரமைப்பு பணி பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு-வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

நாகர்கோவில் : நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது ரூ.15 கோடியில் சீரமைப்பு பணி நடக்கிறது. மழை பெய்யும் சமயங்களில் கூட சாலை பணி நடைபெறுவதாக ஏற்கனவே பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காலை வேளையில் சாலை பணி நடக்கிறது. இதன் காரணமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

நேற்று காலையிலும் சாலை பணி நடந்தது. இதன் காரணமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் இருந்து  நாகர்கோவிலில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பணிக்கு  வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள்  பெரும் பாதிப்படைந்தனர். சுங்கான்கடை முதல் பார்வதிபுரம் வரை ஏராளமான வாகனங்கள் நின்றன.

அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள், தனியார் வாகனங்கள் சிக்கி தவித்தன. காலை 10 மணிக்கு பின் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மேற்கு மாவட்ட பகுதிகளில் இருந்து நாகர்கோவில் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தோட்டியோடு வழியாக சென்றன. கண்டன்விளை, குருந்தன்கோடு, ஆசாரிபள்ளம் வழியாக நாகர்கோவில் வந்தன. வருகிற 17ம் தேதி முதல் சபரிமலை சீசன் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக பணியை வேகமாக முடிக்கும் வகையில் நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். மழையும் தொடர்ந்து பெய்து வரும் நிலையில், சாலை பணியில் தொய்வும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

நாகர்கோவிலில் ₹40.80 கோடியில் சாலை சீரமைப்பு

நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ.40 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் மகேஷ் தெரிவித்தார்.

நாகர்கோவில்  மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று காலை ரவுண்டானா அமைய இருக்கும் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. ஹோம் சர்ச்  முன்பு  பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்  அவர் கூறியதாவது:

நாகர்கோவில் மாநகர பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் ஆய்வு  பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மை பணி நடந்து வருகிறது. சாலை சீரமைப்பு  பணிக்கு ஏற்கனவே ரூ‌.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.  தற்போது மேலும் ரூ.10 கோடியே 80 லட்சம் நிதி வந்துள்ளது. மொத்தத்தில்  ரூ.40 கோடியே 80 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட  உள்ளது. இந்த நிதியின் மூலமாக எந்தெந்த வார்டுகளில் எந்தெந்த சாலைகள்  சீரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

கவுன்சிலரின்  கருத்துக்கள் கேட்கப்பட்டு முதற்கட்டமாக அந்த சாலைகள் சீரமைக்கப்படும்.  நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் ரவுண்டானா ரூ.10 லட்சம்  செலவில் அமைக்கப்படும். இந்த ரவுண்டானா 30 அடி சுற்றளவில் அமைக்கப்படும்.  கலெக்டர் அலுவலக முன்பகுதியில் உள்ள ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து  வருகிறது. அந்த பகுதியில் நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை  நடத்தப்பட்டு வருகிறது.

எந்த வகையான நினைவுச்சின்னம் அமைக்கப்பட  வேண்டும் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அந்த நினைவு  சின்னம் அந்த பகுதியில் அமைக்கப்படும் என்றார்.  ஆய்வின் போது கவுன்சிலர்கள்  விஜிலா, பால்அகியா, மண்டல தலைவர் ஜவகர் பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம்,   தொண்டரணி எம்.ஜே. ராஜன், பகுதி செயலாளர் ஷேக் மீரான், வக்கீல் அகஸ்தீசன்,   ஆனந்த பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: