வீரவநல்லூர்: நெல்லை மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்தவர் துரை கதிரேசன். மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சண்முக செல்வி. இவரது மகன் விசயராகவன். பெங்களூரில் இன்ஜினியராக பணியாற்றுகிறார். புதுக்கோட்டை அசோகன் - உமா கனக லட்சுமி தம்பதியரின் மகள் தீபிகா. இவர் திருச்சி ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றுகிறார். விசயராகவன் - தீபிகா திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு வீரவநல்லூரில் நேற்று நடந்தது. இவர்களது திருமணத்தை வேள்வி, சடங்குகள் ஏதுமின்றி திருக்குறளை வாசித்து திருமணம் நடத்த மணமகனின் தந்தை துரை கதிரேசன் திட்டமிட்டார். அதற்கு மணமகள் தீபிகாவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ‘திருக்குறள் தமிழ் திருமணம்’ என அச்சிட்டு உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
அதன்படி விசயராகவன் - தீபிகா திருமணம் திருக்குறள் வழியில் தமிழறிஞர் கவிஞர் குமாரசுப்பிரமணியம் தலைமையில் வீரை கவிச்சுடர் முத்தையா முன்னிலையில் திருக்குறள் வாசித்து நேற்று காலை நடந்தது. பெற்றோர்கள், உற்றார், உறவினர்கள் அனைவரும் நெல் தூவி மணமக்களை வாழ்த்தினர். திருமணம் நிகழ்ந்த கையோடு மணமக்கள் விசயராகவன் - தீபிகா ஆகிய இருவரும் திருமணக் கோலத்துடன் முதன் முதலாக அந்த பகுதியில் அமைந்துள்ள வீரவநல்லூர் கிளை நூலகத்திற்கு சென்றனர். அங்கு ஏற்கெனவே நூலக புரவலராக இருக்கும் மணமகன் விசயராகவன் 100 மாணவ, மாணவிகளை தனது திருமணத்தின் போது நூலக உறுப்பினராக சந்தா தொகை செலுத்த திட்டமிட்டிருந்தார். அதன்படி திருமண பரிசாக நேற்று நூலக உறுப்பினர் சந்தா தொகை செலுத்தி அருகில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளை நூலக உறுப்பினராக்கினார்.
நிகழ்ச்சியில் வீரவநல்லூர் வாசகர் வட்ட தலைவர் ஆதம் இல்யாஸ், செயலாளர் சந்திரசேகரன், இணைச்செயலாளர்கள் எஸ்.பி.ராமன், மரகதராஜ், பெரியார் செல்வம், துணைத்தலைவர் சந்தனக் குமார், பொருளாளர் பெரியார் பித்தன், செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், இசக்கி சரவணன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் நவநீதன், பழனி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். நெல்லை மு.ந. அப்துர் ரஹ்மான் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் வள்ளிநாயகம் நிகழ்வை ஒருங்கிணைத்தார். பாப்பாக்குடி பைந்தமிழ் பேரவை சார்பில் பாப்பாக்குடி முருகன் வாழ்த்திப் பேசினார். விசயராகவன் - தீபிகா திருமணத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.