மோர்பி பாலம் விபத்து குஜராத் அரசு பதிலளிக்க கெடு: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

அகமதாபாத்:  குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் 7 நாட்களில் அரசு, நகராட்சி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் மோர்பியில், பழமை வாய்ந்த தொங்கு பாலம் கடந்த 30ம் தேதி திடீரென அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அசுதோஷ் சாஸ்திரி ஆகியோர் அடங்கிய அமர்வு மோர்பி பாலம் விபத்தை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. பாலம் அறுந்து விழுந்தது தொடர்பாக தலைமை செயலாளர், மாநில உள்துறை, நகராட்சிகளின் ஆணையர், மோர்பி நகராட்சி, மாவட்ட கலெக்டர், மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. விபத்து தொடர்பாக 7 நாட்கள் பதிலளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: