மூணாறு மக்கள் பீதி மாடு, நாயை கொன்ற புலி

மூணாறு: கேரள மாநிலம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புலியின் நடமாட்டத்தால் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். சிவன்மலை எஸ்டேட் பார்வதி டிவிஷனை சேர்ந்த சண்முகராஜ் என்பவர் வளர்த்த நாய், நேற்று முன்தினம் இரவு அதிக சத்தத்துடன் குரைத்து கொண்டிருந்தது. இதை கேட்டு சண்முகராஜ் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது நாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பரிசோதனை நடத்தியதில் புலி தாக்கி கொன்றது தெரிய வந்தது. இதேபோல் கூடாரவிளை எஸ்டேட்டில் மேய்ச்சலுக்கு சென்ற ஆறுமுகம் என்பவரின் பசுவை புலி தாக்கி கொன்றது. தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் பசுவை, புலி தாக்கி கொன்றுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. புலியின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே புலியின் அச்சுறுத்தலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: