விடுமுறை நாளான நாளை ஓய்வுபெறவுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவல் பணி இன்றுடன் நிறைவு: நாளை மறுநாள் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

புதுடெல்லி: விடுமுறை நாளான நாளை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் ஓய்வுபெற உள்ள நிலையில், அவரது அலுவல் பணி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்க உள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் நாளையுடன் (நவ. 8) நிறைவடைகிறது. நாளை குருநானக் ஜெயந்தி என்பதால், உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாகும். அதனால் இன்றுடன் யு.யு.லலித்தின் அலுவல் ரீதியான பணி நிறைவு பெறுகிறது. நாளை அவர் முறைப்படி ஓய்வு பெறுகிறார்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் அதாவது நீதிமன்றத்தின் மதிய  உணவு இடைவேளைக்கு பிந்தைய அமர்வில், வழக்கமான தலைமை நீதிபதியின் அமர்வு  கூடும். அந்த அமர்வில் நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி பேலா எம்  திரிவேதி ஆகியோர் பங்கேற்பர். சம்பிரதாய முறைப்படி, உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதியாக பணி ஓய்வு பெறும் நீதிபதி, தனக்கு அடுத்த தலைமை நீதிபதியை தலைமை  அமர்வு இருக்கையில் அமரவைப்பார். அந்த நிகழ்வில் பார் உறுப்பினர்கள்  மற்றும் ஒன்றிய அரசின் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர்.  

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியின் கடைசி அமர்வு கூட்டம் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில்  நேரடியாக ஒளிபரப்பப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த  ஆகஸ்ட் 26ம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி என்வி ரமணா ஓய்வு பெறும் கடைசி  நாளன்று, சம்பிரதாய அமர்வின் நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன என்பது  குறிப்பிடத்தக்கது.

இன்றுடன் யு.யு.லலித் அலுவல் ரீதியாக ஓய்வு பெறும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்க உள்ளார். அவர் வருகிற 9ம் தேதி (நாளை மறுநாள்) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் மூத்த நீதிபதி சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க தடை விதிக்க கோரி  முர்சலின் அசிஜித் சேக் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்துள்ளார். அந்த மனுவில், ‘நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த சில  உத்தரவுகள் முரண்பாடுகளை கொண்டுள்ளன, எனவே, அவர் 50வது தலைமை நீதிபதியாக  பதவியேற்க தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை  தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, அடிப்படை ஆதாரமின்றி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: