தேர்தலில் போட்டியிட தந்தைக்கு சீட் மறுப்பு; மாஜி அமைச்சர் மீது கறுப்பு மை வீச்சு: குஜராத் காங்கிரசில் பரபரப்பு

அகமதாபாத்: தேர்தலில் போட்டியிட தனது தந்தைக்கு சீட் மறுக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் மீது கறுப்பு மை வீசப்பட்ட சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத் சட்டப் பேரவை தேர்தல் வரும் டிச. 1 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைமையகம் அமைந்துள்ள அகமதாபாத்தில், வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பாரத்சிங் சோலங்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது காங்கிரஸ் நிர்வாகி ரோமின் சுதார் பேசுகையில், ‘எனது தந்தை ரஷ்மி காந்த் சுதாகருக்கு எல்லிஸ்பிரிட்ஜ் சட்டமன்ற ெதாகுதியில் போட்டியிட சீட் ஒதுக்க வேண்டும்’ என்று கேட்டார். ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மறுத்தனர். இதனால் ரோமின் சுதாருக்கும், முன்னாள் அமைச்சர் பாரத் சிங்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ரோமின் சுதார், தனது கையில் வைத்திருந்த கறுப்பு மையை பாரத்சிங் சோலங்கி மீது வீசினார். அதனால் அவரது ஆடை முழுவதும் கறுப்பு மை படிந்தது. அங்கிருந்தவர்கள் ரோமின் சுதாரை வெளியேற்றினர். இவ்விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதால், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: