இன்றும், நாளையும் பவுர்ணமி கிரிவலம் அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்கு ஒற்றை வரிசை: கலெக்டர், எஸ்பி ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பவுர்ணமி கிரிவலம் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் நேரடி ஆய்வு நடத்தினர். பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய ஒற்றை வரிசை ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தினார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாள் நடைபெறும் விழாவின் நிறைவாக, அடுத்த மாதம் 6ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். தீபத்திருவிழாவை தரிசனம் செய்ய, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையார் கோயிலில் நேற்று கலெக்டர் முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் முன்னேற்பாடுகள் குறித்து நேரடி ஆய்வு நடத்தினர். கிரிவலம் செல்லும் பக்தர்களின் பெரும்பாலானோர் கோயிலில் தரிசனம் செய்வதை விரும்புகின்றனர். அதனால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கடந்த மாதம் பவுர்ணமியின்போது 5 மணி நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். எனவே, இன்றும், நாளையும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தின்போது, ஒற்றை வரிசையை ஏற்படுத்தி, பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Stories: