ஆலந்தூரில் 2 ஆண்டாக பூட்டியிருந்த வீடு இன்று காலை மழையால் இடிந்து விழுந்தது

ஆலந்தூர்: மழையால் பூட்டப்பட்டு  இருந்த வீடு திடீரென இடிந்துவிழுந்ததில், பைக் சேதமானது.  அந்த நேரத்தில் யாரும்  வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆலந்தூர் முக்தம் ஜி தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர்.  இதனால் இவர்களது வீடு கடந்த 2 ஆண்டாக பூட்டப்பட்டு இருந்தது.  தற்போது 3 நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையால் வீடு நனைந்து இருந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து பயங்கர சத்தத்துடன் சாலையில் விழுந்தது. அப்போது அந்த பகுதியில் நிறுத்தி வைத்திருந்த பைக் சேதமானது. இந்த வீட்டையொட்டியுள்ள புது வீடுகளுக்கு எந்தவித சேதமும் இல்லை. இதுகுறித்த தகவலறிந்ததும் ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், 160வது வார்டு பெண் கவுன்சிலர் பிருந்தா ஸ்ரீமுரளிகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல உதவி செயற் பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகளை அரை மணி நேரத்தில் அப்புறப்படுத்தினர்.  இந்த சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது.

Related Stories: