பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை காவல் கட்டுப்பட்டு அறையை நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர், ‘‘பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் மர்ம நபர் சுற்றுவதாகவும், அங்கு வெடிகுண்டு வெடிக்கப் போகிறது,’’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர் குழுவினர், ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில், பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்து தீவிர சோதனை செய்தனர். இதனால், அங்கிருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேறினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேர சோதனையில், பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, செம்பியம் போலீசார் இதுதொடர்பாக விசாரணை செய்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணை வைத்து சரி பார்த்தபோது அந்த எண் 2 பேர் கைமாறி, 3வது நபரான அம்பத்தூர் மாதுளங்குப்பம் பகுதியை சேர்ந்த பரத்குமார் (எ) பிரவீன் (24) என்ற நபர் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனால், செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், அவர் கடந்த 2 ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகி, சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதும், தொடர்ந்து அதற்கான சிகிச்சைகள் பெற்று வருவதும் தெரியவந்தது. மேலும், செம்பியம் போலீசார் அவரின் பெற்றோர்களை வரவழைத்து உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனைதொடர்ந்து, பிரவின்குமார் மீது வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை காவல் நிலைய பிணையில் அனுப்பி வைத்தனர்.

Related Stories: