கறம்பக்குடி பகுதியில் வடிகால் வசதிகளை சீரமைத்து தர வேண்டும்-பகுதி சபா கூட்டத்தில் வலியுறுத்தல்

கறம்பக்குடி : கறம்பக்குடி பகுதியில் வடிகால் வசதிகளை சீரமைத்து தர வேண்டும் என பகுதி சபா கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தேர்வு நிலை பேரூராட்சியில் நேற்று காலை பேரூராட்சி பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. 8வது வார்டில் உள்ள குளக்காரன் தெருவில் 8வது வார்டு பேரூராட்சி கவுன்சிலரும், கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சி திமுக தலைவருமான முருகேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், வரி தண்டலர் மாரிமுத்து, பாலசுப்பிரமணியன் மற்றும் 8வது வார்டு பகுதியை சேர்ந்த குளக்காரன் தெரு, மருத்துவர் காலனி, நெய்வேலி சாலை, அம்புக்கோவில் சாலை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், பெண்கள் மருத்துவர் காலனி பகுதிக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும், மழை காலங்களில் தண்ணீர் வீட்டிற்குள் புகாத வண்ணம் வடிகால் வசதிகளை சீரமைத்து தர வேண்டும், பேரூராட்சியில் சுற்றி திரியும் பன்றிகளை முழுவதும் அப்புற படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு வைத்தனர்.

அனைத்து கோரிக்கைகளும் பேரூராட்சி தலைவர் முருகேசன் தலைமையில் தீர்மானங்களாக நிறைவேற்ற பட்டன. இதேபோல கறம்பக்குடி பேரூராட்சி பகுதி சபா கூட்டம் 1வது வார்டில் வார்டு உறுப்பினர் கருப்பையா தலைமையிலும், 2 வது வார்டில் முருகேஸ்வரி, 3வது வார்டில் செண்பகவள்ளி, 4 வது வார்டில் வளர்மதி, 5 வது வார்டில் ஜன்னத் பேகம், 6வது வார்டில் பரக்கத் நிஷா, 7 வது வார்டில் பிரித்வி ராஜா, 9வது வார்டில் ராஜா 10, வது வார்டில் மஞ்சுளா தேவி, 11வது வார்டில் பரிதா பேகம், 12வது வார்டில் பேரூராட்சி துணை தலைவர் நைனா முகமது, 13வது வார்டில் ராஜசேகர், 14 வது வார்டில் ரெங்காசமி, 15 வது வார்டில் மங்கையர்கரசி ஆகியோர் தலைமையில் அந்தந்த வார்டுகளில் சபா கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில் அனைத்து வார்டு பகுதிகளிலும், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: