சிறுத்தை மர்மச்சாவு விவகாரத்தில் அதிரடி காத்திருப்போர் பட்டியலுக்கு தேனி வன அதிகாரி மாற்றம்: மாந்திரீகத்திற்காக விலங்குகள் வேட்டை?

தேனி: தேனி எம்பி ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதாக கூறப்பட்ட உதவி வன பாதுகாவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தேனி தொகுதி அதிமுக எம்பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான பெரியகுளத்தில் உள்ள பண்ணைத்தோட்டத்தில் சோலார் மின் வேலியில் கடந்த செப். 27ம் தேதி பெண் சிறுத்தை சிக்கியது. இதனை மீட்க முயன்றபோது தேனி மாவட்ட உதவி வன பாதுகாவலர் மகேந்திரனை சிறுத்தை தாக்கியதாக கூறப்பட்டது.

இச்சம்பவத்திற்கு மறுநாள் இதே தோட்டத்தில் மற்றொரு ஆண் சிறுத்தை சோலார் மின் வேலியில் சிக்கி ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எம்பி ரவீந்திரநாத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து வனத்துறை சார்பில் ரவீந்திரநாத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து ரவீந்திரநாத் தரப்பில் வனத்துறையினரிடம் நேற்று விளக்க கடிதம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சிறுத்தை தாக்கியதாக கூறப்பட்ட மாவட்ட உதவி வன பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன்  நேற்று திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக ஷர்மிலி மாவட்ட உதவி வன பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ரவீந்திரநாத் எம்பி தோட்டத்தில் சிறுத்தை மட்டுமல்லாமல் இன்னும் பல அரிய வகை விலங்குகள் இறந்திருக்கலாம் எனவும், இதில் வனத்துறையினர் உண்மையை மூடி மறைப்பதாகவும் மாவட்டம் முழுவதும் பரவலாக பேச்சு எழுந்துள்ளது. மேலும் மாந்திரீகத்திற்காக சில மிருகங்கள் வேட்டையாடப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* ஓ.பி.எஸ் மகன் வக்கீல் மூலம் விளக்கம்

சிறுத்தை மர்மச்சாவு விவகாரத்தில் வனத்துறை அனுப்பிய சம்மன் சம்பந்தமாக, ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி தரப்பில் அவரது வக்கீல் சந்திரசேகர், தேனி வனச்சரக அலுவலகம் வந்து, வனச்சரகர் செந்தில்குமாரிடம் சிறுத்தை சாவு சம்பந்தமாக விளக்கம் அடங்கிய கடிதத்தை நேற்று அளித்தார். இக்கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விளக்க விபரங்கள் வெளியிடப்படவில்லை. விளக்க கடிதத்தை தொடர்ந்து வனத்துறையினர் எடுக்கப்போகும் நடவடிக்கையை பொறுத்து, கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: