டிவிட்டர் பக்கத்தில் மத உணர்வுகளுக்கு எதிராக பதிவு திருமாவளவன் மீது கமிஷனர் அலுவலகத்தில் பாஜ புகார்

சென்னை: டிவிட்டர் பக்கத்தில் மத உணர்வுகளுக்கு எதிராக பதிவு செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜ மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாராயணன் திருப்பதி நேற்று அளித்துள்ள புகார்: சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணிக்கு அனுமதி அளித்த நாள் அன்று, சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ‘நவம்பர் 6ம் நாள் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதிகளை அச்சிட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய இருக்கிறோம்’ என்று ஒரு வீடியோவுடன் ஒரு டிவிட் பதிவிட்டுள்ளார்.

மாநிலத்தில் திருமாவளவனும் அவரது கட்சியினரும், அவர் கூறும் மனு ஸ்மிருதியின் ஒரு லட்ச பிரதிகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளனர். மனு ஸ்மிருதியின் மேற்கூறிய நகல்களில் தரக்குறைவாக கூறப்படும் பகுதிகள் இருக்கும் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மட்டத்தில் உள்ள ஒருவர் தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புவது மட்டுமில்லாமல் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் வளர்க்க முயற்சிப்பதும், மதம், ஜாதி அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே மோதல்களை தூண்டும் நோக்கிலும் உள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: