போடி வென்னிமலைத்தோப்பு பகுதியில் விரைவில் உருவாகும் ரயில்வே சுரங்கப்பாதை: ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் உறுதி

போடி: போடி வென்னிமலைத்தோப்பு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே சுரங்கப்பாதை விரைவில் அமைக்கப்படும் என்று தினகரன் செய்தி எதிரொலியாக அப்பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள் உறுதி அளித்தனர். போடியில் இருந்து தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக மதுரை வரை 90 கி.மீ தூரத்திற்கு கடந்த 87 ஆண்டுகளாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு நடுவே அகலப்பாதை அமைப்பதற்காக இந்த பாதையில் 2010ல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அப்போதைய அதிமுக அரசு 25 சதவீத நிதி வழங்காததால் 7 ஆண்டுகளாக இந்த பணிகள் முடங்கியது.

பின் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு 2017ம் ஆண்டு ரூ.170 கோடி மதிப்பிலான இத்திட்ட பணிகள் துவங்கியது. முதற்கட்டமாக மதுரை - தேனி இடையே 74 கி.மீ பணிகள் நிறைவடைந்து ரயில்சேவை தொடங்கியது. அடுத்ததாக தேனி - போடி இடையே 16 கி.மீ அகல ரயில்பாதை பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடந்துள்ளது. இதற்கிடையே சுப்புராஜ் நகர் ரயில் நிலையம் அருகே வென்னிமலை தோப்பு சாலையை கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே அகலப்பாதை பணிகளுக்கான அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை ரயில்வே நிர்வாகம் இடித்து அகற்றியது.

அப்போது அப்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் உறுதி அளித்து. இதையடுத்து அப்பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு கீழ் பகுதியில் மட்டும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பாலத்தின் முகப்பு பகுதிகளில் முழுமையாக மண் கொட்டப்பட்டது. இதையடுத்து நடைபெற வேண்டிய சுரங்கப்பாதை பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. சுரங்கப்பாதை இல்லாததால் இப்பகுதி மக்கள் பரமசிவன்மலை அடிவார பகுதிக்கு செல்ல சுமார் 2 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியதாக இருக்கிறது. பலரும் ரயில்வே பாலத்தின்மீது ஏறி தண்டவாளத்தை கடக்கின்றனர்.

ஆனால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் இந்த வழியை பின்பற்ற முடியவில்லை. மேலும் ரயில்கள் போடி வரை பயணத்தை தொடரும் நிலையில் தண்டவாளத்தை கடப்பது ஆபத்தாக அமையும். இதையடுத்து ரயில்வே சுரங்கபாதையை விரைவாக அமைக்க வேண்டும் என்ற மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த பிரச்னை தொடர்பாக தினகரன் நாளிதழில் சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து தென்னக ரயில்வே மதுரை கோட்ட நிர்வாக செயற்பொறியாளர் சரவணன், போடி தாசில்தார் ஜலால் மற்றும் தலைமையிடத்து துணை தாசில்தார் கணேஷ்குமார் உள்ளிட்டோர் வென்னிமலை தோப்பு பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தனர்.

இதன்படி வென்னிமலை தோப்பு ரயில்வே கிராஸிங்கில் சுரங்கப்பாதை அமைக்க அப்பகுதியில் உள்ள 26 மரங்களை வெட்டி அகற்றிட முடிவு செய்யப்பட்டது. இவை அதிக பயன்பாடு இல்லாத மரங்கள் என்பதுடன், இதற்கு மாற்றாக சாலையோரம் மரக்கன்றுகள் நட முடிவானது. மேலும் இப்பணிகள் விரைவாக துவங்கப்பட்டு ஒன்றரை மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: