ஏரல் அருகே மங்கலகுறிச்சி-பெருங்குளம் சாலையில் படுகுழிகளால் விபத்து அபாயம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஏரல்: ஏரல் அருகே மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள படுகுழியினால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை உடனடியாக சீரமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரல் அருகே மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் மெயின் சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் ஆலமரம் ஸ்டாப் அருகே சாலையின் நடுவில் படுகுழி ஏற்பட்டு அதில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

இதனால் இந்த சாலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் படுகுழியில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த இடத்தில் எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மங்கலகுறிச்சி, கீழமங்கலகுறிச்சி, மங்களாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பண்ணைவிளை பள்ளி, சாயர்புரம் பள்ளி, கல்லூரிகளில் இவ்வழியாக சென்று படித்து வரும் மாணவ, மாணவிகளும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஏரலில் இருந்து ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மற்றும் சாயர்புரம், புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கும் இவ்வழியாக போக்குவரத்து நடந்து வருவதால் ஏராளமான வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள இந்த படுகுழிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உடன் சீரமைத்திட வேண்டும். மேலும் இந்த சாலையை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: