பகத்சிங் வேடத்தில் ஒத்திகை, தூக்கு கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் மரணம்; கர்நாடகாவில் சோகம்

சித்ரதுர்கா: தூக்கு மேடையில் ஏறும் பகத்சிங் வேடத்திற்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா டவுன் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பாக்யலட்சுமி. இவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். தம்பதிக்கு 12 வயதில் சஞ்சய் என்ற மகன் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள  தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், கர்நாடக உதய தினத்தை முன்னிட்டு பள்ளியில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் பகத்சிங் வேடம் அணிந்து பங்கேற்க முடிவு செய்து வீட்டில் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில், தூக்கு மேடையில் பகத்சிங்கை தூக்கிலிடுவது போல் முகத்தை துணியால் மூடிக்கொண்டு மின்விசிறியில் கயிற்றை கட்டி ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் நின்றிருந்த சோபாவில் இருந்து குதித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கயிறு அவரின் கழுத்தை இறுக்கியது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர், வீட்டுக்கு திரும்பி வந்த போது, சஞ்சய் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இது குறித்து  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சஞ்சய்யின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவன் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: